நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, February 29, 2016

மண்ணறை விஜயம் !

மண்ணறை விஜயம் !
.......................................
மெத்தென்றிருக்க அங்கே
மெத்தையில்லை கட்டிலுமில்லை
பளிங்குத்தரையும் இல்லை
பட்டு விரிப்புகளும் இல்லை
கட்டாந்தரையிலே கிடத்திவிடுவார்கள்!

தட்டுத்தடுமாறவேண்டும்
கும்மிருட்டு வெளிச்சமும் இல்லை!
குப்பென்று வியர்க்கும்
திறப்பதற்கு ஜன்னலுமில்லை
கதவுகளுமில்லை !
தாகமாக இருக்கும்
அருந்துவதற்கு பானங்களும் இல்லை
பாத்திரங்களுமில்லை!
உதவி தேவைப்படும்
உரத்துக்கூவினாலும்
ஒருவரும் வரவே மாட்டார்கள்!
கோடீஸ்வரன் ஒரு விநாடியிலே
பிச்சைக்காரனாகி விடுவான்!
உற்றார் உறவினர் இருந்தும்
ஓடியாட எத்தனையோபேர் இருந்திருந்தாலும்
ஒற்றையிலே உறங்குவான் !
கற்றை கற்றையாக காசை
எண்ணிக்கணக்கிட்டவனின்
கன்னத்தின்கீழே
எதற்குமே உதவாத
மண்ணாங்கட்டிகளை
மணக்கும் நீரில் தோய்த்து
வைபார்கள் !
பிணமென்ற சொல்லை
உனது பணத்தால்கூட மாற்ற முடியாது
ரணமென்றால் மருந்துகட்டி
ஆற்றிவிடலாம்
ஆனாலிதுவோ மருந்தேதுமில்லா
ம ரணம் ஆயிற்றே !
சத்தியமா சகோதரா எனக்கு மட்டுமல்ல
இது உனக்கும் ஒரு நாள்
நிச்சையம் நடக்கும்!
மு.இ.உமர் அலி
2016 Feb 29

Wednesday, February 24, 2016

கரியல் சைக்கல்!











கரியல் சைக்கல்!
................................
"ரெலீ'என்பது கம்பனிப் பேரு
இங்கிலாந்துதான் அது பிறந்த ஊரு
அதுதான் எங்கு வாப்பாட காறு
என்னை ஊரெல்லாம் ஏற்றியோடும் தேரு!


காலயில கல்முனைக்கு போகும்
அது திரும்பி வர பலமணி நேரமாகும்
பாதையில காற்றுப்போனா வீடுவந்து
சேர்வதற்கும் காலதாமதமாகும்!
சைக்களின் பின்னால இருக்கும்
ஒரு மரக் கரியல்
அதில தெரியும்
கலம்பக் கயிற்று வரியல் !
கரியலில் ஏறிக்குந்துவோம்
இருபக்கமும் கால்போட்டு அமருவோம்
சொரியலில் இருந்த அரிசியை
சாக்கிலே அள்ளிக்கட்டுவோம்
கடைகளுக்கு கொண்டு விற்ப்போம்!
கல்முனை சந்தைக்குப்போய்
வாப்பா வரும்போது
கரியலின் முதுகிலே ஒரு உரப்பை
அமர்ந்திருக்க
அதனுள்ளே சொரியலில்
பல சாமான்கள் இருக்கும்
இருபக்கமும்
அரைவாசி பழுத்த வாழைக்குலைகள்
தொங்கிவரும்
சில வேளை அவை நிலத்திலே
அரைத்துவரும்!
சந்தையில் இருந்து வாப்பா வரும்வரை
காத்திருக்கும் எங்களை தூரத்தே வரும் சைக்கிள்
கிரீஸ் போடாததால் ஏற்படும்
கிரீச்சிடும் ஒலி கவர்ந்திடும் !
நன்கு கனிந்த கொய்யா
நான் உள்ளே இருக்கின்றேன் என்பதை
பையை அவிழ்க்கமுன்னரே
நாறிச் சொல்லிடும்!
செருப்புப்போடாத சில்லுகள்
தெருப்பொருக்கிகளான
பளுத்துக்காய்ந்த நெருஞ்சிகளால்
பதம் பார்க்கப்படும்போது
புஸ்சென்று காற்றுப்போய்
பயணங்கள் பாதியிலே
நின்று விடும்!
ஏற்றங்கள் கால்களுக்கு சவாலாக
இறக்கங்கள் "பிரேக் "உடன் சண்டை பிடிக்கும்
மணியடிக்காத சந்திகள்
மோதலுடன் மட்டுமன்றி
சண்டைகளையும் பிறப்பிக்கும்!
சொகுசு வாகனமும் அதுதான்
எங்கள் கனரக வாகனமும் இதுதான்
புதுசு வாங்க ஏலா நிலைதான்
இதுவும் காலால் மீன் பிடிக்கும் வலைதான்
கரியல் சைக்கலில்
கன எடை ஏற்றினால்
கம்பிக்கட்டு விட்டுப்போகும்
பூட்டாத சைக்கிளை
பெருந்தெருவிலே விட்டால்
அது உன் கைவிட்டுப்போகும்!
அரிகாற்றுப் போனால்
பரிகாரமாய் கொஞ்சம்
பட்டுத்தேயிலையை டியூப்பிற்குள்
போட்டடித்தால் சரியாகிப்போகும்!
கணக்குப்பாடத்துக்கு
கொண்டு சென்றால் எல்லோரும்
அதுபோடும் சத்தத்ததையும்
அதன் அலங்கோலத்தையும் பார்த்து
ஏளனமாய் சிரிப்பார்கள் ,
அதனால் நான்
நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது!
வாப்பா காலஞ்சென்ற பின்னால்
கவனிப்பரற்றுக்கிடந்தது
அந்த ஈருருளி!
கனக்க உழைத்து
கரளாலே கருத்து
உருக்குலைந்த சைக்கிளை
ஒவ்வொரு நாளும் பார்க்கையில்
என் வாப்பாவின் உருவமும்
நான் கடந்து வந்த பாதையும் தெரியும்!
பாதுகாக்க நினைத்து
புழக்கடையில் பதுக்கிவைத்தேன்
பாவி யாரோ எடுத்துவிட்டான்
என் கனவுகளை கலைத்துவிட்டான்!
மு.இ.உமர் அலி
24. feb 2016

Tuesday, January 5, 2016

Sunday, July 26, 2015

தொட்டில் சாக்கு - மாட்டுவண்டி-4



தொட்டில் சாக்கு -
மாட்டுவண்டி-4
..............................................................
மாட்டுவண்டியின் அடிப்பக்கம் இருக்கும் பலகைக்கு கீழாக சில்லு பொருத்தப்பட்டிருக்கின்ற  அச்சுக்கு முன்பாக ஒரு சாக்கு அல்லது உரப்பையை நான்கு மூலையிலும் இணைத்து கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும் ,உருவத்தில் ஒரு தொட்டி போல இது இருப்பதனால் "தொட்டிச்சாக்கு" என பெயர்பெற்றிருக்கின்றது.
தொட்டிச்சாக்கினுள் வண்டியின் பாவனைக்கு தேவையான கயிறுகள் ,அரிக்கன் லாம்பு, புல் அறுப்பதற்கான அரிவாள் (தாக்கத்தி ),திருக்குக்கம்பு போன்றவற்றை வைப்பார்கள்,சிலர் சிறிய அளவிலான அடைக்கட்டை போன்றவற்றையும் வைப்பார்கள்.
வண்டிகள் ஏற்ற ,இறக்கமான இடங்களில் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்றும்போது அவை முன் பின் நகராமல் இருப்பதற்காக சில்லின் அடியில் இந்த அடைக்கட்டைகளை வைப்பார்கள்.

கயிறுகளில் மூட்டான்,தேடா,நைலோன் போன்ற வெவ்வேறு வகையான கயிறுகள் வைத்திருப்பார்கள்,ஏற்றிச்செல்லப்படும் பாரங்களுக்கு ஏற்ப கயிறுகளை தெரிவுசெய்வார்கள்

பாரங்களை ஏற்றி கயிற்றினால் கட்டிய கட்டினை இறுக்குவதற்காக சுமார் ஓரடி நீளமான உறுதியான கம்புகளால் கயிற்றினை திருகுவார்கள்,இவ்வாறு திருகுதல் "திருக்குப்போடுதல்" எனப்படும்.
 காடுகளுக்கு  மரம்வெட்டச்செல்வோரில் சிலர்  தமது சமையல்  பாத்திரங்கள்,அரிசி புளி போன்றவற்றையும்  தொட்டில் சாக்கினுள்தான்  வைப்பார்களாம்.

நிந்தவூர் பிரதேசத்தில் மாட்டுவண்டிகளை தயாரிப்பதில் பிரபல்யமும் நுணுக்கமும்வாய்ந்த சுலைமாலெவ்வை ஓடாவி-அல்லது நெடிய ஓடாவி வயோதிகத்தினால் சுகவீனமுற்றதன் பின்னர் இப்பிரதேசத்தில்  உள்ள வண்டில்காரர்கள் திருத்த வேலைகளுக்காகவும் ,புதிய வண்டில்களை அமைப்பதற்காக்கவும் சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அந்த ஒரோர்களில் இன்னும் வண்டில்கள் தயாரிக்கக்கூடிய ஓடாவிமார் இன்னும் இருக்கின்றார்கள்.

Wednesday, July 22, 2015

மாட்டுவண்டிகள்!

மாட்டுவண்டிகள்-தொடர்  3
................................
மாட்டு வண்டி வைத்திருப்போர் மாடுகளிற்கு தீவனமாக வைக்கோல்,தவிடு போன்றவற்றையே கொடுப்பதே வழமை.வயல் அறுவடை களத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வண்டிகள் சாரி சாரியாக செல்லும்.சூடடித்த களவெட்டியை சூட்டுக்கலவேட்டி என அழைப்பார்கள்.
சூட்டுக்களவெட்டியில் சிந்திக்கிடக்கும் வைக்கோலை வண்டில் காரர்கள் " குத்தூசி "எனப்படும் ஆயுதம் மூலமாக ஒன்று திரட்டி வண்டியில் ஏற்றுவார்கள்.சிறிய வண்டியில் பெருமளவிலான வைக்கோலை ஏற்றுவது அவர்களுக்கு அனுபவ ரீதியான ஒரு கலையாகும்.
வண்டி வீதியால் செல்லும்போது பின்னால் ,இடது வலது பக்கங்களில் வருவது என்ன வாகனம் என்று வண்டிக்காரகளால் அறிந்து கொள்ள முடியாது.
வண்டிகளில் ஏற்றிவந்த வைக்கோலை வளவுகளில் மேட்டுபக்கமான இடத்தில் நல்லதோர் அடித்தளத்தை போட்டு அதன்மேல் கும்பமாக குவிப்பார்கள்,உருவத்தில் இத்தகு ஒரு "நெற்சூடு "போல தெரியும்.இதனை "வைக்கோல் கந்து" என அழைப்பார்கள்.
இவ்வாறு குவிக்கப்பட்ட வைக்கோல் கந்திலிருந்து வைக்கோலை தினமும் உருவி எடுத்து மாடுகளிற்கு தீவனமாக போடுவார்கள்.வைக்கோலை ஒரே பக்கம் உருவாமல் வட்ட வடிவமாகவே உருவுவார்கள்.ஏனெனில் கந்து சரிந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகவே.
வைக்கோல் போரின் அடியில் வீட்டின் பேட்டுக் கோழிகள் சென்று முட்டையிடும்.வீட்டுச்சிருவர்கள் மலை நேரங்களில் மறைந்து விளையாடுவார்கள்,வைக்கோல்போரில் விளையாடுவது நன்றாய் இருக்கும் ஆனால் அதன் "சுணை"இலகுவில் சென்றுவிடாது.
"சில நாய்கள் வைக்கோல் கந்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்,யாரும் வைக்கோல் எடுப்பதற்கென்று கிட்டபோனால் உறுமும்,குரைக்கும்,ஆனால் அந்த நாய் ஒருநாளும் வைக்கோல் உண்பதே இல்லை"
இந்தப்பிராந்தியத்திலிருந்த வண்டில்காரர்கள் எண்பதுகளிலும் அதற்கு முற்பகுதிகளிலும் வைக்கோலை சூடடித்த வயல்களில் இருந்து ஏற்றி ஒலுவில் உள்ள வைக்கோல் சேகரிக்கும் நிலையத்தில் விற்பனை செய்வது அன்று இருந்த ஒரு நல்ல வருமானமுள்ள தொழிலாகும்.நாளடைவில் பயங்கரவாதப்பிரச்சினை தலைதூக்கியதாலும் வாழைச்சேனை காகிதத்தொழில்சாலை மூடப்பட்டதனாலும் இந்தத்தொளிலும் இல்லாமல் போய்விட்டது.
பிற்காலத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்ய துவங்கியதிலிருந்து உற்பத்தியாகும் வைக்கொல்களின் அளவும் இப்பிராந்தியத்தில் குறையத்துவங்கிகிற்று.இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் சிறு துண்டுகளாக சிதைக்கப்படுவதாலும் ,ஓரிடத்தில் குவியாமல் வயல் முழுக்க சிதரிக்கானப்படுவதாலும் வைக்கோலை ஒன்று திரட்டி ஏற்றுவது சற்று கடினமான விடயமாகும்,ஆனால் தீவனத்திற்காக கஷ்டப்பட்டு வண்டில் உரிமையாளர்கள் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றார்கள்,
இப்புகைப்படம் நேற்று நிந்தவூரில் என்னால் பிடிக்கப்பட்டது .

மு.இ.உமர் அலி
2015 july 23rd

Tuesday, July 21, 2015

காலாவதியான காவின்கள் !

காலாவதியான காவின்கள் !
....................................................
எண்ணங்களால்
விவாகரத்துச்செய்துகொண்ட
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் ஊருக்கும் பேருக்கும்
ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றன!

ஒட்டறை பிடித்த
உறவுகளில்
தொடரும் பிடிவாதம்
புதிதாக வலைகளைப் பின்னி
சத்தோசத்தை சிக்கவைத்து
சிறைப்பிடிகின்றது!
அநேகமானோர்
நேர்த்திக்கடன் இல்லாமலேயே
தீமித்து
அலகு குத்துகின்றனர்
அப்பப்போ
காவடியும் கூட ஆடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்
வார்த்தைகளுக்கு மட்டும்
தடைவிதிக்கும் வாய்
உபவாசம் இருந்து
பிறைகாணாமலேயே
பெருநாள் கொண்டாடுகின்றது!.
மு.இ.உமர் அலி
2015 JULY 21ST

Saturday, July 18, 2015

தடுமாற்றம்

தடுமாற்றம்
.....................
பெருநாள் கொண்டாடும்
நண்பனை வாழ்த்தினேன்
பதிலுக்கவன்
உன்னை நாளை வாழ்த்துகிறேன்
இன்று வாழ்த்த முடியாமலுள்ளேன்
என்றான்.

பாதியிலே பிரியாத
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18